திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்
திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு, நவம்பர் 28ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31ம் தேதி, மருத்துவ காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரம் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழகத்தில் பல கோடி ஊழலில் ஈடுபட்டதற்காக, குற்றப் புலனாய்வுத்துறையால் (சிஐடி) கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைதுக்கு பின்னர், சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கின் வரலாறு
ஒருங்கிணைந்த ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு பின், ஆந்திர பிரதேசத்திற்கு என தனியாக, ஆந்திர பிரதேச மேம்பாட்டு கழகம் என்பது தொடங்கப்பட்டது. மேலும் இது அரசாங்கம்-தனியார் கூட்டணியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் சிஸ்டம் லிமிடெட் உடனான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. 90% தனியார் பங்களிப்புடனும், 10% அரசாங்க பங்களிப்புடனும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது. இந்த நிறுவனத்துடன் ₹3356 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தின் படி சீமென்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும். ஆனால் அந்நிறுவனம் அவ்வாறு வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டதாக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு, முறைகேடு நடந்திருப்பதாக குற்றப்புலனாய்வு துறை கண்டறிந்து இருந்தது.
முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் சீமென்ஸ் நிறுவனம்
சீமென்ஸ் நிறுவனம் வழக்கத்திற்கு மாறாக திட்டத்தின் தொகையை ₹3,300 கோடியாக உயர்த்தியுள்ளது. இதனால் இதில் நிதிமுறை கேட்டு நடந்திருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிந்தனர். சீமென்ஸ் நிறுவனம் வழங்கிய தொழில்நுட்ப உதவிகளின் மதிப்பு வெறும் ₹58 கோடி எனவும், ஆனால் ஆந்திரா அரசு ₹371 கோடியை வழங்கியது எனவும் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முக்கிய பங்காற்றிய 26 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, பத்திருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே, ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான, சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.