காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு
ஜூலை 8 ஆம் தேதி கனடாவின் டொராண்டோவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்த திட்டமிட்டிருக்கும் பேரணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கனேடிய தூதர் கேமரூன் மெக்கயோவுக்கு இந்திய அரசாங்கம் அழைப்புவிடுத்துள்ளது. ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இவருக்காக ஜூலை 8 ஆம் தேதி கனடாவில் ஒரு பேரணியை நடத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த பேரணிக்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்களில், ஒட்டாவாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொராண்டோவில் உள்ள இந்திய தூதரக ஜெனரல் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் மிரட்டல் குறித்துகருத்து தெரிவித்த கனேடிய வெளியுறவு அமைச்சர்
இந்த மிரட்டலுக்கு கனேடிய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து இன்று பேசிய கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, "தூதர்களின் பாதுகாப்பு தொடர்பான வியன்னா உடன்படிக்கையின் கீழ் கனடா தனது கடமைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. ஜூலை 8 ஆம் தேதி திட்டமிடப்பட்ட போராட்டம் தொடர்பாக ஆன்லைனில் பரப்பப்படும் சில விளம்பரங்கள் குறித்து கனடா, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை." என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கான கனேடிய தூதர் கேமரூன் மெக்கயோவுடன் பேச்சு வார்த்தை நடத்த இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைக்கத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.