பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு
கடந்த வாரம் முதல் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலைக்கான உத்தரவதை கோரி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் அரசாங்கக் குழுவிற்கும் இடையிலான நான்காவது பேச்சு வார்த்தை நேற்றிரவு நடைபெற்றது. இதற்கு முன்பு நடந்த 3 பேச்சு வார்த்தைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை என்றாலும், நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் அரசாங்கம் ஒரு முக்கிய முன்மொழிவை அறிவித்துள்ளது. பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்ய இருக்கும் அரசு நிறுவனங்கள்
நேற்று நள்ளிரவுக்கு மேல் நீடித்த பேச்சு வார்த்தை முடிவடைந்ததை அடுத்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த செய்தியை ஊடங்களுடன் பகிர்ந்துகொண்டார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்களது இதர கோரிக்கைகள் மீதான முடிவு நிலுவையில் உள்ள நிலையில், தங்கள் சங்கங்களில் இந்த திட்டம் குறித்து விவாதிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர். பயிர்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடையும் போது விவசாயிகளைப் பாதுகாக்க அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலை குறைந்தபட்ச பாதுகாப்பு விலை(MSP) என்று அழைக்கப்டுகிறது. அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோருடன் விவசாயிகளை சந்தித்த பியூஷ் கோயல், கொள்முதலுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகளுடன் அரசு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் என்றும் கொள்முதல் அளவுக்கு வரம்பு இருக்காது என்றும் கூறினார்.