அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, தேசத்தை காலனித்துவ முத்திரைகளில் இருந்து விடுவிக்க, இன்று போர்ட் பிளேயரை ஸ்ரீ விஜய புரம் என்று மறுபெயரிட முடிவு செய்துள்ளோம். முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜயபுரம் அடைந்த வெற்றியைக் குறிக்கிறது. நமது சுதந்திரப் போராட்டத்திலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனிப்பெரும் பங்கும் அதில் உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
சோழர்களை குறிப்பிட்ட அமித் ஷா
அமித் ஷா தனது எக்ஸ் பதிவுகளில் மேலும், "நமது சுதந்திரப் போராட்டத்திலும், வரலாற்றிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவுப் பகுதி இன்று நமது மூலோபாய மற்றும் வளர்ச்சி அபிலாஷைகளுக்கு முக்கியமான தளமாகத் திகழ்கிறது." என்று குறிப்பிட்டார். தமிழகத்தை சேர்ந்த பிற்காலச் சோழர்களின் காலத்தில் தமிழகம் முதல் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளை ஆண்ட சோழர்களின் தளங்களில் ஒன்றாக இது விளங்கியது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா மேலும், "நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் நமது தேசியக் கொடியை முதன்முதலில் வெளிப்படுத்திய இடம் இதுவாகும். மேலும் வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராளிகள் அடைக்கப்பட்ட செல்லுலார் சிறையும் இங்குள்ளது." என்று கூறினார்.