சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; 8 அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக 8 அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர்க்கப்பல்களை தயாரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் ₹40,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த திட்டம், சமீப காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மிகப்பெரிய பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய கடற்படையின் போர்த் திறனை மேம்படுத்தவும், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தொழில்நுட்பம்
கொல்கத்தா மற்றும் கோவா ஆலைகளில் 70% உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உற்பத்தி
அரசுக்கு சொந்தமான கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் ஃபில்டர்ஸ் மற்றும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் ஆகிய இரண்டு கப்பல் கட்டும் நிறுவனங்கள் இணைந்து இந்த போர்க்கப்பல்களை உருவாக்கவுள்ளன.
மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் மற்றும் சாகர் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், இந்த கப்பல்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படவுள்ளன.
இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் புதிதாக உருவாகும்.
ரேடாரில் சிக்காத வடிவமைப்பு
ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் வடிவமைப்பு மற்றும் அதிநவீன போர் அம்சங்கள்
புதிதாக தயாரிக்கப்படவுள்ள இந்த அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள் ஒவ்வொன்றும் சுமார் 2,000 டன் எடையும், மணிக்கு 30 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும் திறனும் கொண்டதாக இருக்கும்.
இந்திய கடற்படையின் சொந்த வடிவமைப்பில் உருவாகும் இந்த கப்பல்கள் ரேடாரில் எளிதில் சிக்காத ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும்.
மேலும், எதிரிநாட்டுக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தடுத்து அழிக்கும் நவீன ஏவுகணைகள், ரேடார்கள் மற்றும் சென்சார்கள் இந்த கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும்.
இலக்கு
2030-க்குள் முதல் போர்க்கப்பல் விநியோகம் மற்றும் சவால்கள்
இந்த போர்க்கப்பல்களைக் கட்டும் பணிகள் அடுத்த ஓராண்டிற்குள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிடப்பட்ட காலக்கெடுவின்படி முதல் போர்க்கப்பல் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கப்பல்கள் விநியோகிக்கப்படும்.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீன கடற்படையின் ஊடுருவலும் நடமாட்டமும் கணிசமாக அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தவும், ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தவும் இந்த புதிய போர்க்கப்பல்கள் பெரும் பலமாக அமையும்.