வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு தனது விதிகளில் திருத்தம் செய்துள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு மகப்பேறு நலன்கள் எதுவும் குறிப்பிடப்படாத 50 ஆண்டுகால விதிமுறையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மத்திய சிவில் சர்வீசஸ் (விடுப்பு) விதிகள், 1972ன் படி, "இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை பெற்ற தாய், அரசு ஊழியராக இருந்து, அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டால், அவருக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.
தந்தைக்கும் 15 நாட்கள் விடுப்பு
இயற்கையாகப் பிரசவிப்பவர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு சலுகைகள், வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கும் கிடைப்பதை இந்த சட்ட திருத்தம் உறுதி செய்கிறது. மேலும், இந்த சட்ட திருத்தத்தின் படி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தந்தைக்கும் 15 நாட்கள் விடுப்பு வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை அவர் எடுத்துக்கொள்ளலாம். தற்போதுள்ள விதிகளின்படி, பெண் மற்றும் ஆண் அரசு ஊழியர்கள் இருவரும் தங்கள் முழுப் பணிக் காலத்தில் 730 நாட்கள் வரை குழந்தை பராமரிப்பு விடுப்பு எடுக்கலாம். மத்திய சிவில் சேவைகள் (விடுப்பு) (திருத்தம்) விதிகள், ஜூன் 18 அன்று அறிவிக்கப்பட்டது.