Page Loader
கொரோனா மீண்டும் பரவுகிறது: மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை
மத்திய அரசு, மாநில அரசுகளை எச்சரித்து, சுகாதார வசதிகளை வலுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது

கொரோனா மீண்டும் பரவுகிறது: மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2025
01:02 pm

செய்தி முன்னோட்டம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளை எச்சரித்து, சுகாதார வசதிகளை வலுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் உபகரணங்கள், தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அவசியமான மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநில அரசுகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களுக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 4,302 பேர் கொரோனா தொற்றுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 864 புதிய நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. ஜனவரி 1 முதல் இதுவரை 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை

ஆபத்து இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொற்று அதிகரித்து வரும் மாநிலங்கள்- கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்டவை ஆகும். இது தொடர்பாக, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் தலைமையில் தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பரவி வரும் கொரோனா வகை மிகச் சாதாரணமாகவும், பெரிதாக பயப்படத் தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் கீழ்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.