தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி சென்சஸ் பணி! மத்திய அரசு விதிகளில் திருத்தம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, 1990 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அரசு உதவிபெறும் மற்றும் உதவிபெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை கணக்கெடுப்பாளர்களாகப் பயன்படுத்த மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைப் பதிவாளர் மிருத்யுஞ்சய் குமார் நாராயணன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.
வழக்கு பின்னணி
நீதிமன்ற வழக்குகள் மற்றும் பின்னணி விவரங்கள்
தனியார் பள்ளி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று பஞ்சாப் - ஹரியானா, அலகாபாத் மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் இடைக்காலத் தடை விதித்திருந்தன.
1948 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தில் இதற்கான தெளிவான விதிகள் இல்லை எனத் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வாதிட்டன.
இந்தச் சட்ட சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், கணக்கெடுப்புப் பணிகளுக்குத் தேவையான பணியாளர்களின் எண்ணிக்கையை உறுதி செய்யும் வகையிலும் இப்புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
யாருக்கு தகுதி?
யார் யாரெல்லாம் கணக்கெடுப்பாளர்களாகப் பணியாற்ற முடியும்?
புதிய திருத்தப்பட்ட விதிகளின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை ஊழியர்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் எழுத்தர்கள் மற்றும் அலுவலர்களை மாநில அரசுகள் கணக்கெடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், மாநில நிர்வாகங்களால் தகுதியானவர்கள் எனக் கருதப்படும் எந்தவொரு தனிநபரும் இக்கணக்கெடுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
சென்சஸ் 2027
இரண்டு கட்டங்களாக நடைபெறும் சென்சஸ் 2027 பணிகள்
சுதந்திரத்திற்கு பிந்தைய எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்சஸ் 2027, வீடுகள் பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
மத்திய அமைச்சரவை இத்திட்டத்திற்காக ₹11,718 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
கோவா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 2026 டிசம்பர் 1 முதல் கணக்கெடுப்பு தொடங்குகிறது.
நாட்டின் பிற பகுதிகளில் 2027 பிப்ரவரி மாதம் இந்த பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.