தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவு: மேகதாது விவகாரத்தில் சூடுபிடிக்கும் காவிரி பிரச்சினை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைப்படி, தமிழகத்தின் பாசனத் தேவைகளுக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று ஆணையம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுத்து வரும் சூழலில், டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்வினை
மேகதாது அணை சர்ச்சை மற்றும் அரசியல் எதிர்வினைகள்
இந்த உத்தரவைத் தொடர்ந்து, டெல்லியில் முகாம்மிட்டுள்ள கர்நாடக பிரதிநிதிகள் அம்மாநில முதலமைச்சருடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஒருபுறம் காவிரி நீர் திறப்புப் பிரச்சினை நிலவ, மறுபுறம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரம காட்டி வருகிறது.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
கர்நாடகா
கர்நாடக முதலமைச்சரின் கருத்து
இதற்கிடையே மேகதாது விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், மேகதாது பகுதியை நேரில் பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் தயாராக இருப்பதாகவும் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசுவது தேவையற்றது என்றும், அது காவிரிப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை
அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சரின் கர்நாடகப் பயணம் தொடர்பான செய்திகளுக்குப் பதிலளித்தார்.
"முதலமைச்சர் கர்நாடகம் பயணம் மேற்கொள்வது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வரும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்" என அவர் தெரிவித்தார்.