தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
ஆனால் அந்த தீர்ப்பினை கர்நாடகா அரசு ஏற்க மறுத்தது.
இதனிடையே கடந்த 11ம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது.
அதில் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.
ஆனால் அதனையும் கர்நாடகா அரசு ஏற்கவில்லை.
காவிரி நீர் பங்கீட்டில், குறிப்பிட்ட மாநிலங்களுக்கு, ஒழுங்காற்று குழு தங்களது முடிவினை வேண்டுகோள் அல்லது பரிந்துரையாகவே முன்னெடுத்து வைக்க முடியும்.
அதனை மாநிலங்கள் ஏற்காத பட்சத்தில், அந்த விவகாரத்தில் மேலாண்மை தலையிடும் என்பது விதி.
காவிரி
26வது காவிரி மேலாண்மை கூட்டம்
அதன்படி இன்று(அக்.,13) டெல்லியில் 26வது காவிரி மேலாண்மை கூட்டம் மதியம் 2 மணியளவில் கூடியது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநில பிரதிநிதிகள் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இக்கூட்டம் துவங்கிய பின்னர், இரு மாநிலங்கள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்த விவரங்களை மேலாண்மை ஆணைய தலைவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழ்நாடு மாநிலத்திற்கு வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படியே, காவிரி மேலாண்மை ஆணையமும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.