'ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது' - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை
ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உரிமையாளர் பெயரோடு அவரது சாதி பெயரினை குறிப்பிட்டு கூறி காளைகளை அவிழ்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டுகளுள் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை போற்றும் விதமாக பொங்கல் திருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்தகைய பண்டிகை காலத்தில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி பெருமளவில் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை ஆகும். தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தனி மவுசு உள்ளது என்றால் அது மிகையாகாது.
மதுரை ஜல்லிக்கட்டு நடத்தப்படும் தேதிகள் அறிவிப்பு
மேலே குறிப்பிட்ட அந்த 3 இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், வெளிமாநிலங்களிலிருந்து மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகைத்தருவர். இதன்படி, இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர், 3 இடங்களில் நடத்தப்படும் போட்டிக்கான தேதிகளை அறிவித்துள்ளனர். பாலமேட்டில் ஜனவரி 16ம்.,தேதியும், அவனியாபுரத்தில் 15ம்.,தேதியும், அலங்காநல்லூரில் வரும் 17ம்.,தேதியும் நடைபெறவுள்ளது. இதற்கிடையே மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்த்தப்படும் பொழுது உரிமையாளர்கள் பெயரோடு அவர்களது சாதிப்பெயரினை குறிப்பிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தீண்டாமை உறுதிமொழி எடுக்கப்படவேண்டும் என்னும் மனுதாரரின் கோரிக்கையினை பரிசீலனை செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.