கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(டிஎம்சி) முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய பல இடங்களில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள அவரது வீடுகள் உட்பட அவருடன் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், கடந்த வியாழக்கிழமை மஹுவா மொய்த்ரா மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்தது. அதனையடுத்து, தற்போது மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஊழல் தடுப்பு ஆம்புட்ஸ்மேன் லோக்பால் அமைப்பு, இந்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம்
பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தொழிலதிபர் ஹிராநந்தானியுடன் தனது நாடாளுமன்ற உள்நுழைவு பாஸ்வோர்டுகளை எம்பி மொய்த்ரா பகிர்ந்து கொண்டதாகவும், அதனால் தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மொய்த்ரா தனது நாடாளுமன்ற உள்நுழைவு விவரங்களை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியுடன் பகிர்ந்து கொண்டதற்காகவும், அவரிடமிருந்து விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைப் பெற்றதற்காகவும் அவர் நாடாளுமமன்றத்தில் இருந்து 2023 டிசம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த செவ்வாயன்று, மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட்டது.