மேலாளரைத் தாக்கிய மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை; எஸ்பிஐ அறிக்கை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது, சென்னை அடையாற்றில் உள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரியைத் தாக்கி, கெட்ட வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடையாற்றில் எஸ்பிஐ வங்கி இயங்கி வரும் கட்டடத்தின் உரிமையாளரான கயல்விழி, அந்த வங்கியின் என்ஆர்ஐ கிளை மேலாளரைத் தாக்கியதாக மூத்த வங்கி அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு காவல் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தகராறு
லிஃப்ட் பழுது தொடர்பாக எழுந்த தகராறு மற்றும் தாக்குதல்
எஸ்பிஐ வங்கியின் மண்டல வணிக அலுவலகத் தலைமை மேலாளர் நமச்சிவாயம் என்பவர் ஜூலை 21 ஆம் தேதி அளித்த புகாரின்படி, வங்கி செயல்படும் கட்டடத்தில் பழுதடைந்துள்ள லிஃப்ட்டை சரிசெய்ய வேண்டும் என்று வங்கி கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரியிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கயல்விழியின் பிரதிநிதியிடம் பலமுறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி வங்கிக்கு நேரடியாக வந்து மேலாளரைத் தாக்கி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
வழக்கு
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
வங்கி மேலாளரைத் தகாத வார்த்தைகளால் பேசி, அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கயல்விழி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக அமலுக்கு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 296(b), 329(4), 115(2), மற்றும் 351(2) ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அடையாறு காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்பிஐ
ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எஸ்பிஐ வங்கி உறுதி
இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள எஸ்பிஐ நிர்வாகம், "சென்னையில் உள்ள எங்கள் வங்கிக் கிளையில் நடந்த இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.
எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம்.
ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வங்கி நிர்வாகம் சட்டப்பூர்வமாகத் தேவையான அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் எடுக்கும்." என்று உறுதியளித்துள்ளது.