மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்த அவரை ஆளுநர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்நிலையில் ஜனாதிபதி மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவரது வருகையையொட்டி அவனியாபுரம்-அருப்புக்கோட்டை சாலையில் வாகனம் செல்ல அனுமதிக்கப்படாமல், அவனியாபுரம் செம்பூரணி சாலை வழியாக செல்ல காவல் துறையினர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், அவனியாபுரம் செம்பூரணி சந்திப்பில் வைக்கம் பெரியார் நகர் சாலையில் ஜனாதிபதி வரும் பாதையில் கார் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
பளூத்தூக்கும் இயந்திரம் கொண்டு கார் அப்புறப்படுத்தப்பட்டது
தகவலறிந்து அங்கு வந்த அவனியாபுரம் போலீசார் பளூத்தூக்கும் இயந்திரம் கொண்டு அந்த காரினை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். ஜனாதிபதி அவ்வழியே வர ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த விபத்து நேர்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று(பிப்.,18) மதுரை வந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின்னர் மீண்டும் அங்கிருந்து கோவைக்கு செல்கிறார். மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு நடக்கும் சிறப்பு பூஜையில் இவர் கலந்துகொண்டு நாளை(பிப்.,19) டெல்லிக்கு திரும்பவுள்ளார். கோவைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியும் உடன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.