அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெ.அழகாபுரி என்ற கிராமத்தில் கண்மாய் மற்றும் கண்மாய்க்கு செல்லும் வழி காணாமல் போய்விட்டதாக அந்த ஊர் மக்கள் புகார் அளித்துள்ளனர். இது தமிழக அமைச்சரும் திமுக தலைவருமான பி.மூர்த்தியின் தொகுதிக்கு உட்பட்ட கிராமமாகும். இந்த கிராமத்தில் இருந்த கண்மாய், ஆக்கிரமிப்புகளால், காணாமல் போய் இருக்கிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் கேட்டபோது, அந்த இடத்தில் கண்மாய் இருந்ததற்கான ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வெ.அழகாபுரி கிராமத்தில் 3.5ஏக்கர் பரப்பளவில் ஒரு கண்மாய் இருந்திருக்கிறது.
'அத்திப்பட்டி' போல் மாறிய வெ.அழகாபுரி
கண்மாய் இருந்த இடத்தில் தனியார் நிறுவனத்திற்கு பிளாட்டு போடும் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளதால் கண்மாய் காணாமல் போய் இருக்கிறது. கண்மாய் இல்லாததால் நிலத்தடி நீர் இல்லாமல் அந்த ஊர் மக்கள் கஷ்டப்படுகின்றனர். ஆகவே, தங்களது கண்மாயை கண்டுபிடித்து தருமாறு அந்த ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் கிராமத்தில் குடிநீர், கழிப்பிடம், அங்கன்வாடி, ரேசன்கடை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் இருக்கிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனால், தங்கள் ஊர் சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் மாறிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்திலேயே இவ்வளவு பிரச்சனைகள் இருப்பது விமர்சகர்களை கேள்வி கேட்க வைத்துள்ளது.