ஆண் மற்றும் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி
தற்போது இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகும். அதே வேளையில் ஆண்களுக்கான திருமண வயது 21 என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வயது வரம்பை சமமாக மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தாவது: பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் பல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பாலின நீதியை பாதுகாக்க வேண்டும். அதற்கு இருபாலரின் குறைந்தபட்ச திருமண வயதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எனவே இது தொடர்பாக டெல்லி மற்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்களில் போடப்பட்டிருக்கும் மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, டில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட அஸ்வினி உபாத்யாயின் மனுவை விசாரித்தபோது, "பெண்களின் திருமண வயதான 18ஐ தன்னிச்சையாக நீக்கிவிடலாமா? அப்படி செய்தால் எத்தனை வயதுடைய பெண்களும் திருமணம் செய்து கொள்ளலாம். ஏனென்றால், 21 வயதை அவர்களது திருமண வயதாக நிர்ணயிக்க உச்சநீதிமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது. இவை பாராளுமன்றம், சட்டசபைகள் மற்றும் அரசாங்கங்களின் வேலையாகும். பாராளுமன்றத்திற்கு வழிகாட்டுதலை அனுப்பவோ அல்லது சட்டத்தை இயற்றவோ உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை" என்று கூறிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.