ஆதார் எண்ணை வைத்து நம் வங்கிக்கணக்கை ஹேக் செய்ய முடியுமா?
செய்தி முன்னோட்டம்
இந்திய குடிமகன்களின் முக்கியமாக அடையாள அட்டையாக ஆதார் இருந்து வருகிறது. புதிய சிம் கார்டு வாங்குவதில் தொடங்கி வங்கிக் கணக்கு திறப்பது வரை அனைத்துக்கும் ஆதாரைய ஆதாரமாகக் கேட்கின்றன நிறுவனங்கள்.
இப்படி பல இடங்களில் நம்முடைய ஆதார் தகவல்களை நாம் அடையாளத்திற்காகக் கொடுக்கிறோம். இவற்றை தவறாகப் பயன்படுத்தி ஆதாருடன் இணைந்திருக்கும் வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியுமா என்ற அச்சம் பலருக்கும் இருந்து வருகிறது.
ஆனால், வெறும் ஆதார் எண் அல்லது ஆதார் அட்டையை வைத்துக் கொண்டு வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியாது என தன்னுடைய இணையப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது UIDAI.
ஆதாருக்கான தகவல்களை மக்களிடமிருந்து சேகரிப்பது, புதிய ஆதார் வழங்குவது உள்ளிட்ட பணிகளை கவனித்துக் கொள்ளும் அதிகாரப்பூர்வ அமைப்பே UIDAI.
ஆதார்
UIDAI நம்முடைய செயல்பாடுகளைக் கண்காணிக்குமா?
வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்படுமா என்ற அச்சத்தைப் போலவே UIDAI அமைப்பு நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணிக்குமா என்ற சந்தேகமும் மக்களிடையே இருந்து வருகிறது.
ஆதார் சட்டம் 2016, செக்ஷன் 32(3)-ன் கீழ் UIDAI அமைப்பு நாம் அடையாளத்திற்காக கொடுக்கும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ கூடாது.
அதாவது, நாம் ஒரு புதிய சிம் கார்டு வாங்குவதற்காக ஆதாரை பயன்படுத்துகிறோம் என்றால், அந்தக் சிம் கார்டு குறித்த தகவல்ளையோ அல்லது என்ன செய்கிறோம் என்பது உள்ளிட்ட தகவல்களை UIDAI சேமிக்க முடியாது.
நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, கைரேகை, கருவிழி, புகைப்படம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை மட்டுமே UIDAI கொண்டிருக்கும்.