பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை மார்ச் 23 வரை காவலில் வைக்க அனுமதி
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா மார்ச் 23 வரை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) காவலில் இருப்பார் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின்(கே.சி.ஆர்) மகளான கவிதாவுக்கு, டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தென் மாநிலத்தை சேர்ந்த பிஆர்எஸ் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ED கூறியுள்ளது.
கவிதாவை அமலாக்க இயக்குநரகம் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு
இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா நேற்று மாலை அமலாக்க இயக்குனரகத்தால்(ED) கைது செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள EDயின் தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை காவலில் எடுக்க அனுமதி கோரி, அமலாக்க இயக்குநரகம் இன்று அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தியது. நீதிமன்ற விசாரணையின் போது பேசிய கவிதாவின் வழக்கறிஞர், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவை அமலாக்க இயக்குநரகம் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். விசாரணையின் முடிவில், அவரை மார்ச் 23 வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.