மூளையினை உண்ணும் அமீபா வைரஸ் காரணமாக கேரள சிறுவன் உயிரிழப்பு
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் 'மூளை உண்ணும் அமீபா'(Naegleria fowleri) என்னும் நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தொற்று ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் மூலம் தான் ஏற்படும் என்று கூறுவார்கள். அதன்படி, மரணமடைந்துள்ள மாணவன் குருதத்(15) உடலில் இந்த அமீபாவானது, அவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் பொழுது, மூக்கின் வழியே உடலுக்குள் சென்றிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அமீபா தொற்றானது இது போல் நீச்சலடிக்கும் போதோ, நமது தலைப்பகுதி முழுமையாக நீருக்குள் மூழ்கும்பொழுதோ, தான் நமது மூக்கு வழியே உள்ளே சென்றடையும் என்று கூறப்படுகிறது.
அரிய வகை நோய் தொற்று பாதிப்பு
இந்த அரிய வகை நோய் தொற்று பாதிப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் குருதத், இன்று(ஜூலை.,7)சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நோய் தொற்றின் அறிகுறிகள், முதலில் காய்ச்சல், மூக்கில் நீர் வழிதல், வாந்தி போன்றவை மூலம் அறியப்படும். நோய் தொற்று பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், கழுத்துப்பகுதி இறுக்கமாவது, குழப்பம், சுயநினைவு இல்லாமல் எதையோ யோசித்தவாறு இருப்பது, கற்பனைகள், வலிப்பு, கோமா உள்ளிட்டவை ஆகும் என்று கூறப்படுகிறது. முதன்மை அனிபீக் மெனிங்கோ என்செபாலிடிஸ்(Meningoencephalitis-PAM) என்னும் இந்த தொற்று, Naegleria Fowleri என்னும் சூடான நன்னீரில் காணப்படும் நுண்ணிய ஒற்றை செல் அமீபாவால் ஏற்படுகிறது. இந்த நோய் தொற்று ஏற்பட்டால் 5நாட்கள் முதல் 18 நாட்கள்வரை மட்டுமே உயிர் வாழமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.