புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்
செய்தி முன்னோட்டம்
வரும் ஞாயிற்றுக்கிழமை புது டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை என்று 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி(AAP), திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம்(திமுக), இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம்(RJD), ஐக்கிய ஜனதா தளம்(JDU), தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP), சமாஜ்வாதி கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவினர் உட்பட 19 எதிர்கட்சிகள் புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளன.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்குப் பதிலாக, புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
details
முதல் பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவரைக் அவமதிக்கும் செயல் இது: எதிர்க்கட்சிகள்
இந்துத்துவ சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கரின் பிறந்தநாளன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதையும் பல எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மகாத்மா காந்தியிடமிருந்து தீவிரமாக வேறுபட்ட கருத்துக்களை கொண்டவர் வி.டி. சாவர்க்கர் என்றும், அவர் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட்டவர் என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
"குடியரசு தலைவர் முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, நமது ஜனநாயகத்தின் மீதான கடுமையான அவமதிப்பு மட்டுமல்ல, நேரடித் தாக்குதலும் கூட. இந்த கண்ணியமற்ற செயல் குடியரசு தலைவரின் உயர் பதவியை அவமதிப்பதோடு, அரசியலமைப்பின் எழுத்து மற்றும் உணர்வைவும் மீறுகிறது. முதல் பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவரைக் அவமதிப்பது போலும் இது இருக்கிறது " என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.