'6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக்-ஒபாமாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். முஸ்லீம்கள் இந்தியாவில் ஒடுக்கப்படுவதாக சமீபத்தில் ஒரு பெரும் சர்ச்சை அமெரிக்காவில் கிளம்பியது. இந்த பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். மேலும், அந்நாட்டின் முன்னாள் அதிபரான ஒபாமாவும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார். முஸ்லீம் சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா சிதறிவிடும் அபாயம் இருக்கிறது என்று அவர் CNNக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். "பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் சந்தித்தால், இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:
நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். பிரதமர் மோடி அமெரிக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் இந்திய முஸ்லீம்களைப் பற்றி பேசி இருக்கிறார். மேலும், இது வேறொரு நாடு சம்பந்தப்பட்டது என்பதால் நான் நிதானத்துடன் சொல்கிறேன். நாங்கள் அமெரிக்காவுடன் நட்புடன் இருக்க விரும்புகிறோம். ஆனால், அவர்களும் இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள். எந்த முன்னாள் அமெரிக்க அதிபரின் ஆட்சியின் கீழ் 6 முஸ்லீம் நாடுகளில் 26,000க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டனவோ அவர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். மக்கள் எப்படி அவருடைய குற்றச்சாட்டுகளை நம்புவார்கள்?பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிக் கொள்கைகளுக்கு எதிராக தங்களால் வெற்றி பெற முடியாது என்று அவர்கள் நினைப்பதால், இந்த நாட்டின் சூழலைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள்.