அமிதாப் பச்சன் இல்லம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் மும்பை
செய்தி முன்னோட்டம்
மும்பை உயர்நீதிமன்றம், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் 'ஜல்சா' இல்லம் மற்றும் மகாலக்ஷ்மி பந்தய மைதானம் ஆகிய 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததை அடுத்து, மும்பை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மிரட்டல் மின்னஞ்சல் வந்த தகவலைத் தொடர்ந்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் படையினர் மற்றும் மும்பை காவல்துறையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை
சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை
மும்பை உயர்நீதிமன்றம், நடிகர் அமிதாப் பச்சனின் இல்லம் மற்றும் மகாலக்ஷ்மி பந்தய மைதானம் ஆகிய 3 இடங்களிலும் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு மற்றும் சைபர் பிரிவு போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மிரட்டல்
தீபாவளி விடுமுறைக்கு நடுவே மிரட்டல்
தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை விடப்பட்டுள்ளது.
எனினும், அவசர மற்றும் முக்கிய வழக்குகள் விடுமுறைக்கால அமர்வு மூலம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைக் குறிவைத்து இதுபோன்ற போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம், மும்பை மேயர் ரிது தவடே மற்றும் துணை மேயர் சஞ்சய் சங்கர் காடி ஆகியோரின் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.
அந்த மின்னஞ்சலிலும் நவம்பர் 27 அன்று மகாலக்ஷ்மி பந்தய மைதானத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.