சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலத்திற்கு தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வருவது வழக்கம்.
சில தென் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று(ஏப்ரல்.,25) இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும்,
சிறிதுநேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு அழைப்பினை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பரில், பூக்கடை காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் பாக்யராஜ் தலைமையில் அழைப்பு வந்த தொலைபேசி எண் குறித்து விசாரணை செய்யப்பட்டது.
அதில் அந்த அழைப்பானது கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து வந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வெடிகுண்டு
7 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர் விடுத்த மிரட்டல்
இதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த போனில் பேசியது வியசார்பாடி மல்லிப்பூ காலனியை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன்(21) என்பதும், அவர் 7 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்று இரவு மணிகண்டனின் தந்தை ராமலிங்கம் அவரை பார்த்து கொள்வதற்காக உடனிருந்துள்ளார்.
அவர் தூங்கிய நேரத்தில் செல்போனை எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மணிகண்டன் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது மணிகண்டனின் தந்தை ராமலிங்கத்திற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து திரும்பி வந்துள்ளனர்.
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய்களுடன் ரயில் நிலையம் சென்று சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.