டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்
செய்தி முன்னோட்டம்
இன்று காலை டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை.
எனினும் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பீதியடைந்த பெற்றோர்கள், பள்ளிகளுக்கு வெளியே குவிந்ததால், இது குறித்து உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தின் படி, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் ஒரு புரளி எனத்தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் முழுமையான சோதனை நடத்தியதாகவும், எதுவும் கிடைக்கவில்லை என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
தில்லி காவல்துறையின் (குற்றம்) சிறப்பு சிபி ரவீந்தர் யாதவ் கூறுகையில், செவ்வாயன்று சில மருத்துவமனைகளுக்கும் இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
மிரட்டல் மின்னஞ்சல்
பள்ளிகளுக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியது யார்?
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்த மிரட்டல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஐடி அடையாளம் காணப்பட்டுள்ளது.
காவல்துறை வட்டாரங்களின்படி, மிரட்டல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரி sawariim@mail.ru ஆகும்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், 'சவாரிம்' (வாளை மோதுதல் என்று பொருள்) என்ற வார்த்தை அரபு வார்த்தை என்றும், இது IS-ஆல் 2014 முதல் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மிரட்டல் மின்னஞ்சல்களுக்கு பின்னால் ஏதேனும் அமைப்பு சதி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், மின்னஞ்சல்களை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட ஐபி முகவரி ரஷ்யாவிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. விபிஎன் மூலம் ஐபி முகவரி மறைக்கப்படலாம் என்று டெல்லி போலீசார் சந்தேகிக்கின்றனர்.