'என் மண் என் மக்கள்' நடைபயணத்தில் பரோட்டா மாஸ்டராக மாறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்னும் நடைப்பயணத்தினை தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் தற்போது திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தனது நடைப்பயணத்தினை மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி பகுதியின் வஉசி நகரில் இருந்து துவங்கிய இந்த நடைபயணம் நேற்று(நவ.,7) அண்ணா வளைவு வரை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா போட்டுள்ளனர். அதனை கண்ட அண்ணாமலை அங்கு சென்று தானும் பரோட்டா போடுவதாக அங்கிருந்த பரோட்டா மாஸ்டரிடம் கூறியுள்ளார்.
நடைப்பயணத்தின் போது திருச்சி பாரத மஸ்தூர் சங்கத்தின் கோரிக்கை மனு பெறப்பட்டது
இதனை தொடர்ந்து அந்த உணவகத்தின் பரோட்டா மாஸ்டர் அண்ணாமலைக்கு பரோட்டா போடுவது குறித்து கூற, அதனை கேட்டு அவரும் பரோட்டா போட்டுள்ளார். அதனை அங்கு கூடியிருந்த கட்சியினர் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்த நடைபயணத்தின் போது திருச்சியில் பாரத மஸ்தூர் சங்கத்தின் சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், 'திருச்சி பெல் நிறுவனத்தில் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊழியர்களின் ஊதியப்பணமான ரூ.1.43 கோடி திருடுபோனது. அது குறித்த விசாரணையினை சிபிஐ மேற்கொள்ள வேண்டும்' உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.