ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று(செப்.,2) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், "ஒரே நாடு ஒரே தேர்தல் முறையினை பல கட்சிகள் ஆதரிக்கிறார்கள். ஊழல் செய்யும் கட்சிகள், குடும்ப ஆட்சி செய்வோர், சுயநலவாதிகள் தான் இதனை எதிர்க்கிறார்கள்" என்று தாக்கி பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது செலவுகளை குறைப்பதற்காக மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் சுமைகளை குறைக்கவும் தான் என்று கூறினாராம். தொடர்ந்து அவர், ஊழலில் ஈடுபடுபவர்கள் தான் 'INDIA' கூட்டணியில் முன்னே நிற்கிறார்கள் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியை விட 30% அதிக ஓட்டுகளை பெறுவோம் - அண்ணாமலை
மேலும் அவர் நாம் தமிழர் கட்சி சீமானை விட 1% என்ன, 30% அதிகமாக ஓட்டுக்களை பெறுவோம் எனக்கூறி, சவாலுக்கு தயார் என்றும் கூறியுள்ளார். முன்னதாக 10 ஆண்டுகளாக ஆட்சிப்புரியும் பாஜக என்னை எதிர்த்து தனித்து போட்டியிட்டு 1% ஓட்டு அதிகம் பெறமுடியுமா?என சீமான் கேள்வியெழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு தான் அண்ணாமலை இவ்வாறு பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவர், அக்கட்சியின் கொள்கைகள் என்ன?நாம் தமிழர் கட்சியினரால் என்ன செய்திட முடியும்? இக்கட்சி என்ன மத்தியில் ஆட்சி நடத்தியுள்ளதா? இல்லை மாநில ஆட்சியினை பிடிக்க போகிறதா? என்றும், சீமானின் சவாலை பாஜக'வின் அடிப்படை தொண்டர் கூட ஏற்பார், நாங்கள் அனைத்துக்கும் தயார் என்றும் கடுமையாக சீமானையும் நாம் தமிழர் கட்சியினையும் விமர்சித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.