அதிமுக-பாஜக கூட்டணி தொடரவே இந்த ஆலோசனை கூட்டம்:பாஜக மாநில துணைத்தலைவர்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணியினை முறித்துக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கான அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியானது.
'இனி எவ்வித சூழலிலும் இந்த கூட்டணி மீண்டும் அமையாது' என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.
அங்கு அவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பின் பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள், அதிமுக கூட்டணி முறிவு, அவரது 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளித்ததாக தகவல்கள் வெளியானது.
கூட்டணி
கூட்டணி குறித்து உறுதியாக பேசிய மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி
இதனிடையே, இன்று(அக்.,3)சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக.,மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடக்கவிருந்தது என்று கூறப்படுகிறது.
ஆனால் அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள காரணத்தினால் இக்கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது இக்கூட்டமானது அண்ணாமலை இல்லாமல் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, கருப்பு முருகானந்தம்,வினோஜ் செல்வம், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே இதில் பங்கேற்க வந்த மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமியிடம் இக்கூட்டணி நீடிக்குமா?என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர், "பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆலோசனை நடக்கிறது"என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.