LOADING...
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்தல்: ஜனவரி 20-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தேசிய தலைவருக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்தல்: ஜனவரி 20-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2026
01:38 pm

செய்தி முன்னோட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் வரும் ஜனவரி 20-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது. தற்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராக இருக்கும் நிதின் நவீன், இந்தப் புதிய பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தை சேர்ந்த 45 வயதான நிதின் நபின், ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர். கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி அவர் செயல் தலைவராக நியமிக்கப்பட்டபோதே, கட்சியில் ஒரு தலைமுறை மாற்றத்திற்கான அறிகுறியாக இது பார்க்கப்பட்டது.

தேர்தல்

கட்சியின் தேசிய தலைவர் தேர்வு முறை

தேர்தல் நடைமுறைகளின்படி, மூன்று தொகுப்புகளாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும். ஒரு தொகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் தற்போதைய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் கையெழுத்திடுவர். மற்ற தொகுப்புகளில் மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கையெழுத்திடுவர். வேறு யாரும் போட்டியிட வாய்ப்பில்லை என்பதால், நிதின் நபின் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி

யார் இந்த நவீன்?

ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட நிதின் நபின், மறைந்த பாஜக மூத்த தலைவர் நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார். பீகார் அமைச்சராகவும் அனுபவம் கொண்ட இவர், கட்சி அமைப்பில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவராகக் கருதப்படுகிறார். முன்னதாக ஜே.பி. நட்டாவும் இதே போன்று செயல் தலைவராக இருந்து பின்னர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக தேர்தல் அதிகாரி கே. லட்சுமணன் வெளியிடுவார்.

Advertisement