
இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியாக தமிழருக்கு வாய்ப்பு; பாஜகவின் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தமிழகத்தைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணனை வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை பாஜக தலைவர் ஜேபி நட்டா உறுதிப்படுத்தினார். மேலும், சிபி ராதாகிருஷ்ணனின் வேட்புமனுவை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார். முன்னதாக, கடந்த மாதம் ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததால் துணை ஜனாதிபதி பதவி காலியான நிலையில், செப்டம்பர் 9 ஆம் தேதி அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 22 வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
சிபி ராதாகிருஷ்ணனின் பின்னணி
சிபி ராதாகிருஷ்ணன் என்று பிரபலமாக அழைக்கப்படும் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஆவார். திராவிட அரசியல் களத்தில் பாஜகவின் தேர்தல் இருப்பு குறைவாக இருந்த காலகட்டத்தில், கட்சியின் மாநிலத் தலைவராக அவர் முக்கியத்துவம் பெற்றார். அவரது அடிமட்ட இணைப்பு, தொண்டர்களை அணிதிரட்டுதல் மற்றும் நிலையான விசுவாசம் ஆகியவை சவாலான சூழ்நிலைகளில் கட்சி அதன் இருப்பைத் தக்கவைக்க உதவியது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் நிறுவனத் திறன்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட சிபி ராதாகிருஷ்ணன் பின்னர் மகாராஷ்டிராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு போதுமான பலம் இருப்பதால், எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தினாலும், சிபி ராதாகிருஷ்ணன் வென்று துணை ஜனாதிபதி ஆவது கிட்டத்தட்ட உறுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.