அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது குறித்து பாஜக விளக்கம்
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களின் கூட்டமானது சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நேற்று(மார்ச்.,18) நடந்துள்ளது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து வெற்றி பெறுவதற்குரிய உத்திகள் என்னிடம் உள்ளது. ஒருவேளை தலைமை அதிமுக'வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினால் நான் என் மாநில தலைவர் பதவியினை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருந்து விடுவேன் என்று கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது பெரும் சலசலப்பினை அரசியல் வட்டாரத்தில் உண்டாகியுள்ளது.
பாஜக மாநில துணை தலைவர் விளக்கம்
இது தொடர்பாக கூட்டத்திலேயே வானதி சீனிவாசன் மற்றும் நாராயணன் திருப்பதி தங்களது கருத்துக்களை முன் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அண்ணாமலை பேசியது குறித்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான விளக்கத்தினையும் அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, அதிமுக'வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியதாக பரவும் செய்திகள் தவறானது என்று கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக ஐடி விங் தலைவர் சிடி ஆர் நிர்மல்குமார், திலீப் கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக'விலும், திமுக'விலும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.