இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மற்றும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ், அவரது இந்தியப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். அதை அவரது அதிகாரப்பூர்வ வலைப்பதிவான கேட்ஸ் நோட்ஸில் அவர் பகிர்ந்துள்ளார். சுகாதாரம், மேம்பாடு மற்றும் காலநிலை ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து முன்னெப்போதும் இல்லாததை விட அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக அதில் அவர் கூறி இருக்கிறார். கேட்ஸ் தற்போது இந்தியாவில் அதிகாரபூர்வமான பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் வணிகம், அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க நபர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) போன்ற ஆராய்ச்சி மையங்களையும் அவர் பார்வையிட்டார்.
பிரதமருடனான சந்திப்பை பற்றி கேட்ஸ் கூறி இருப்பதாவது:
எனது பயணத்தின் முக்கிய அம்சம் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்தது. இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் சமத்துவமின்மையைக் குறைக்க அறிவியலும் புதுமையும் எவ்வாறு உதவும் என்பதைப் பற்றி நாங்கள் பேசினோம். காசநோய், உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ் மற்றும் நிணநீர் ஃபைலேரியாசிஸ் போன்ற கொடிய மற்றும் பலவீனப்படுத்தும் நோய்களை அகற்றுவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு பிரதமரை நான் பாராட்டினேன். இந்தியாவில் ஒரு மிகசிறந்த இயக்கம் வடிவம் பெறுவதைப் பற்றி அவர் என்னிடம் கூறினார்: அதாவது, காசநோயாளிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் கவனிப்பை வழங்குவதற்கு சமூகங்கள் அவர்களை தத்தெடுக்கிறதாம். HIVக்கும் இதே போன்ற அணுகுமுறையை தான் இந்தியா செயல்படுத்தியது, இவை நல்ல முடிவுகளைத் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. என்று அவர் கூறியுள்ளார்.