சிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மிகப்பெரிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மோசடியை கண்டறிந்துள்ள நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த ஸ்காலர்ஷிப் நடைமுறையில், 2016 இல் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கிய பிறகு, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் மோசடி வெளிச்சத்திற்கு வந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விசாரணையில், 21 மாநிலங்களில் 8 கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்ட உதவித்தொகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 2018-2019 ஆம் ஆண்டிற்கு, அனைத்து 2,239 உதவித்தொகைகளுடன் ஒரே மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய போலி மதரசாக்கள், பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.
மோசடியை கண்டுபிடித்ததன் பின்னணி
முன்னதாக, 2020இல் ஜார்க்கண்டில் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பில் மோசடி நடந்தது தெரியவந்த பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஜார்க்கண்ட் முதல்வர் இது குறித்து விசாரணை நடத்துவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகமும் ஆய்வு செய்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த மிகப்பெரிய மோசடி அம்பலமானது. இதில் இடைத்தரகர்கள் மட்டுமல்லாது, வங்கி அதிகாரிகள், பள்ளி பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை உள்ளடக்கிய நெட்வொர்க் மூலம் மாணவர்களுக்கான நிதியை திசை திருப்புவது தெரிய வந்துள்ளது. 2007-2008 ஆம் ஆண்டில் தேசிய சிறுபான்மை ஆணையம் நிறுவப்பட்டது முதல் இந்த திட்டத்தின் கீழ், 11 ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரையிலான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.