வீடியோ: தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை கேட்டதால் பெங்களூரு கடைக்காரர் மீது தாக்குதல்
இஸ்லாமிய தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை போட்ட கடைக்காரர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெங்களூரின் சித்தன்னா லே அவுட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. "நான் ஹனுமான் பஜனையை போட்டிருந்தேன். அப்போது, நான்கைந்து பேர் வந்து தொழுகை நேரத்தில் பாடல்களை கேட்டால் அடிப்போம் என்று மிரட்டினர். அவர்கள் என்னை அடித்து, கத்தியால் குத்திவிடுவோம் என்று மீண்டும் மிரட்டினர்" என்று அந்த கடைக்காரர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மூன்று குற்றவாளிகள் தலைமறைவு
இது தொடர்பாக சுலேமான், ஷாநவாஸ், ரோஹித், தியானிஷ் மற்றும் தருணா என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய டிசிபி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லிம்கள் மற்றும் ஒருவர் இந்து ஆவார். "ஹனுமான் சாலிசா இசைக்கப்பட்டதா என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். புகாரில் ஹனுமான் சாலிசா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடைக்காரரை தாக்கிய குழுவில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் அடங்குவர்" என்று டிசிபி சென்ட்ரல் கூறியுள்ளார். மற்ற மூன்று குற்றவாளிகளும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.