பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்
பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அறிவித்துள்ளது. பெங்களூரு ஓட்டலில் வெடிகுண்டு வைத்ததாகக் கூறப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாஹா ஆகிய இரு சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு என்ஐஏ வெகுமதியை அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே 2020 பயங்கரவாத வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர். கர்நாடகாவில் 12, தமிழகத்தில் 5, உத்தரபிரதேசத்தில் 1 என 18 இடங்களில் என்ஐஏ குழு தேடுதல் வேட்டை நடத்தியதை அடுத்து, மார்ச் 28-ம் தேதி இந்த வழக்கில் கூட்டுச் சதிகாரர்களில் ஒருவரான முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஷரீஃப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்ஐஏ கூறியுள்ளது. பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட ஒரு வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால், 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷபீர் என்ற நபர் இன்று காலை பல்லாரியில் வைத்து கைது செய்யப்பட்டார். மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை ஏற்று கொண்டு விசாரிக்க தொடங்கிய என்ஐஏ, வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் பிரதான சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.