பெங்களூரில் அதிர்ச்சி: மனைவி அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றதால் 7 பேரை கொடூரமாக கொன்ற டாக்சி டிரைவர்
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், மனைவி அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மனைவி மற்றும் 7 வயதுச் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொடூரமாகக் கொலை செய்த டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு நாட்களாக தொடர்ந்த இந்த கொடூரக் கொலை சம்பவம் பெங்களூரு நகரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இக்கொடூரச் செயலை செய்தவர் இந்துசேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பின்னணி
கொடூரம் நடந்த பின்னணி: திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலைகள்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்துசேகருக்கும் அவரது மனைவி சுனிதாவுக்கும் இடையே, சுனிதா அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று வருவது தொடர்பாகத் தொடர்ந்து தகராறு நடந்து வந்துள்ளது.
குடும்பத்தினர் சமரசம் செய்ய முயன்றும் தகராறு தீரவில்லை.
சுனிதாவிற்கு அவரது தாயாரும் சகோதரர்களும் ஆதரவாக இருந்ததால் ஆத்திரமடைந்த இந்துசேகர், ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளார்.
முதலில் தனது மனைவி சுனிதாவை ஆட்டுக்கல்லால் அடித்துக் கொன்ற இந்துசேகர், அவரது உடலைத் துணியில் சுற்றி நந்தி ஹில்ஸ் பகுதியில் வீசியுள்ளார்.
பின்னர் சுனிதாவின் மொபைல் போனை அணைத்துவிட்டு, அவர் வெளியில் சென்றிருப்பதாக அண்டை வீட்டாரிடம் பொய் கூறியுள்ளார்.
கொலை
மது விருந்துக்கு அழைத்து கொடூரம்
அடுத்த நாள் மாலை, தனது இரு மைத்துனர்களான சிவகுமார் மற்றும் சங்கரை மது விருந்துக்காகத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அவர்கள் வந்தவுடன், சுனிதாவைக் கொன்ற அதே ஆட்டுக்கல்லால் இருவரையும் அடித்துக் கொன்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மைத்துனர்களின் மனைவிகளான திவ்யா, நளினி, மாமியார் ரூபவதி மற்றும் சிவகுமாரின் 7 வயதுச் சிறுவன் புனீத் ஆகியோரையும் அதே பாணியில் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கைது
சடலங்களை அழிக்க முயற்சி & சிக்கியது எப்படி?
கொலைகளைச் செய்த பிறகு, ரத்தக் கறைகளை அழிக்கவும் ஆதாரங்களை மறைக்கவும் ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி வீட்டைச் சுத்தம் செய்துள்ளார்.
மேலும், உடல்களை தனது காரில் ஏற்றிச் சென்று பல்வேறு இடங்களில் வீசியுள்ளார்.
வியாழக்கிழமையன்று நளினியின் தாயார் ஸ்ரீராம்புரா காவல் நிலையத்தில் அளித்த காணாமல் போனவர் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், இந்தத் தொடர் கொலைகளை கண்டுபிடித்து இந்துசேகரை கைது செய்தனர்.
நந்தி ஹில்ஸ் அடிவாரப் பகுதியில் நடைபெற்ற 4 மணி நேரத் தீவிர தேடுதல் வேட்டையில், சங்கரின் 7 வயது மகன் புனீத்தின் உடலைப் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதுவரை மீட்கப்பட்ட முதல் சடலம் இதுவாகும். ஏனைய 6 பேரின் சடலங்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.