கேரளாவில் பியூன் வேலைக்கு குவிந்த BE, Btech பட்டதாரிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகம் முழுவதுமுள்ள நாடுகளிலேயே இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகம் என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதேபோல் இங்கு நல்ல தரமான கல்வி கிடைக்கும் நிலையிலும், பல படித்துமுடித்த பட்டதாரி இளைஞர்களுக்கு அவர்களது தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில்லை. நாடு முழுவதுமுள்ள மாநிலங்களிடையே கேரளா மாநிலம் தான் அதிக கல்வி பெற்ற மாநிலமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட கேரளாவில் படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மிகவும் குறைவு தான் என்று கூறுகிறார்கள். அதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில் கேரளாவில் ஓர் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், கேரளாவின் ஓர் அரசு அலுவலகத்தில் காலியாக இருந்த பியூன் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சைக்கிள் ஓட்டும் போட்டியில் வெற்றிப்பெற்ற 101 பட்டதாரிகள்
இதற்கான நேர்காணல் நேற்று(அக்.,27) நடந்த பட்சத்தில், இந்த பணிக்கான கல்வி தகுதி 7ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது என்றும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிக்கு விண்ணப்பிப்போருக்கு நன்றாக சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இப்பணிக்கான சம்பளம் ரூ.23,000. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து அரசாங்க உத்யோகம், அதுமட்டுமல்லாமல் நல்ல சம்பளம் என்பதால் அந்த பியூன் வேலை வாய்ப்பினை பெறும் நோக்கில் 100க்கும் மேற்பட்ட பி.இ.,எஞ்சினீயரிங், பி.டெக் படித்த பட்டதாரிகள் நேற்று காலை நேர்காணலுக்கு குவிந்துள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்டும் போட்டி தேர்வில் பங்கேற்று 101 பட்டதாரிகள் வெற்றி பெற்றுள்ளனராம். இன்னும் இவர்களுக்கு சில தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதன்பின்னர் இந்த பணிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.