அரசு அதிகாரிகள் RSSஸில் சேர்வதற்கு விதிக்கப்பட்டிருத்த தடையை ரத்து செய்தது மத்திய அரசு
அரசு ஊழியர்கள் RSS நடவடிக்கைகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய இந்திய அரசின் உத்தரவு, எதிர்க்கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் என்று அழைக்கப்படும் RSS, பாஜகவின் சிந்தாந்த அமைப்பாகும். இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பாஜக தலைவர் அமித் மாளவியா, "58 ஆண்டுகளுக்கு முன்பு, 1966 இல், அரசு ஊழியர்கள் RSS செயல்பாடுகளில் பங்கேற்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்துக்கு எதிரான உத்தரவு மோடி அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார். "நவம்பர் 7, 1966 அன்று, நாடாளுமன்றத்தில் பசுவதைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடந்ததால் இந்தத் தடை விதிக்கப்பட்டது." என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு
"அப்போது RSS -ஜனசங்கம் லட்சக்கணக்கில் ஆதரவைத் திரட்டியது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். 30 நவம்பர் 1966அன்று, RSS -ஜனசங்கத்தின் செல்வாக்கால் அதிர்ச்சியடைந்த இந்திரா காந்தி, அரசு ஊழியர்கள் RSSஸில் சேர தடை விதித்தார்." என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் மத்திய அரசின் இந்த உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ளார். பாஜக அரசு மக்களின் தீர்ப்பில் இருந்து எந்த பாடமும் கற்கவில்லை என்று கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசியும், அரசு ஊழியர்கள் RSS நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தடையை நீக்கியதற்காக அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். "அரசியல் சாசனம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்க மறுத்ததால்தான் RSS மீதான தடை உள்ளது." என்று ஒவைசி கூறியுள்ளார்.