'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது
இந்திய நாட்டின் மொழிகளில் வெளிவரும் இலக்கிய படைப்புகளை பெருமைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு கடந்த 1954ம்ஆண்டு முதல் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் சிறந்த கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் உள்ளிட்டவைகளை தேர்வு செய்து இந்த விருது அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 'ஆதனின் பொம்மை' என்னும் நாவலினை எழுதிய எழுத்தாளரான உதயசங்கர் அவர்களுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமியின் பால புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த உதயசங்கர் 1960ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தார். இவர் குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் மற்றும் நாவல்களை 1978ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார்.
குழந்தை இலக்கியங்கள் என கூறப்படும் நூல்களை இயற்றிய உதயசங்கர்
தற்போது வரை இவர் எழுதிய 8 சிறுகதை தொகுப்புகள், 5 கவிதை தொகுப்புகள், குறு நாவல் தொகுப்பு ஒன்று, 7 கட்டுரை தொகுப்புகள், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் உள்ளிட்டவைகள் வெளிவந்துள்ளது. மேலும் இவர் குழந்தை இலக்கியங்கள் என கூறப்படும் மாயாவின் பொம்மை, பொம்மைகளின் நகரம், புலிக்குகை மர்மம் போன்றவற்றினையும் எழுதியுள்ளார். இந்நிலையில் இவரது படைப்பில் உருவான 'ஆதனின் பொம்மை' என்னும் நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்று நிகழ்வுகள் எப்படி இருக்கும்?, நம்முடைய முன்னோர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்?, அப்போதைய மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.