கர்ப்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகளை செய்ய சிறப்பு தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறையான ஆயுஷ் மருத்துவ படிப்புகளினை முடித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வதற்கான சான்றிதழ் முடித்த மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கான அனுமதியினை வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கம் இந்த வழக்குக்கான மனுவில் கோரியுள்ளனர்.
அதன்படி இந்த வழக்கானது நீதிபதியான எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனு
மனுவினை தள்ளுபடி செய்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்
அப்போது மனுவினை விசாரித்த நீதிபதி, சிசு பாலின தேர்வு தடை சட்டத்தின்படி, கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்ள பல சிறப்பு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
அந்த குறிப்பிட்ட தகுதிகளை பெற்ற மருத்துவர்கள் மட்டுமே அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதியுள்ளவர்கள்.
இத்தகைய சிறப்பு தகுதிகளை பெறாத மருத்துவர்களுக்கு இந்த பரிசோதனைகள் செய்ய தகுதியில்லை என்று தெரிவித்தார்.
மேலும் அவர், மனுதாரரான சங்க உறுப்பினர்கள் இசிஜி, எக்ஸ்ரே போன்ற அடிப்படையான பயிற்சிகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
ஸ்கேன் செய்வதற்கான தகுதியினை அவர்கள் பெறவில்லை.
அதனால் அவர்களுக்கு இதற்கான அனுமதியினை வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.