பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?
அவலான் டெக்னாலஜிஸ் (Avalon Technologies) நிறுவனப் பங்குகள் இன்று இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஒரு பங்கிற்கு ரூ.415 - ரூ.436 என்ற விலையில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. இன்று இந்நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்படவிருந்த நிலையில், நேற்று இதன் கிரே மார்க்கெட் ப்ரீமியமானது ரூ.8 - 10 என்ற அளவில் இருந்தது. இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தின் போது தேசியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு எந்த லாபமும் இன்றி எந்த விலையில் வாங்கப்பட்டதோ அதே விலையான ரூ.436-க்கு பட்டியலிடப்பட்டது அவலான் டெக்னாலஜிஸ் பங்குகள். அதேபோல், மும்பைப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 5 ரூபாய் நஷ்டத்துடன் ரூ.431-க்கு பட்டியலிடப்பட்டது அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.
அவலான் டெக்னாலஜிஸ் ஐபிஓ:
இந்நிறுவனம் ஐபிஓ-வில் (IPO) ரூ.320 கோடிக்கு புதிய பங்குகளையும், ரூ.545 கோடிக்கு முந்தைய பங்குதாரர்கள் மற்றும் புரமோட்டர்களின் பங்குகளையும் வெளியிட்டது. புதிய பங்குகள் மூலம் கிடைக்கும் முதலீட்டை கடனை திருப்பி செலுத்துவதற்காகவும், கார்ப்பரேட் பொது நடவடிக்கைகளுக்காகவும், இதர மூலதனச் செலவுகளுக்காகவும் பயன்படுத்தப் போவதாக அதன் ஐபிஓ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது அந்நிறுவனம். முதலீட்டாளர்களுக்கு லாபமில்லாமல் வர்த்தகத்தை தொடங்கிய இந்நிறுவனப் பங்குகள், வர்த்தக நாளின் போது தொடர்ந்து சரிவைச் சந்தித்து, தற்போது 2.52 மணி நிலவரப்படி தேசிய பங்குச்சந்தையில் 8.04% சரிந்து 400.95 ரூபாயிலும், மும்பை பங்குச்சந்தையில் 8.03% சரிந்து 401 ரூபாயிலும் வர்த்தகமாகி வருகிறது.