மிக்ஜாம் புயலும் தத்தளிக்கும் சென்னையும்; காய்கறிகளின் விலை உயர்வு; ATM மையங்கள் முடக்கம்
மிக்ஜாம் புயலின் தாக்கத்திலிருந்து சென்னையின் பல பகுதிகள் மெல்ல மீண்டு வருகிறது. இருப்பினும் இன்னும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு போன்ற இடங்களில் வெள்ளநீர் விடியவில்லை. அதேபோல, தாழ்வு இடங்களில் வெள்ளநீரும், சாக்கடை நீரும் கலந்துள்ளதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த நிலையில் பல வீடுகளில் தரைத்தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனிடையே மக்களுக்கு படகு மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது அரசு. அதேபோல, பல இடங்களில் ஜெனெரேட்டரை இயக்க டீசல் தேவைப்படுவதால், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
காய்கறிகள் விலையேற்றம், ATM முடக்கம்
புயல் மழை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் மொத்த விலையும், சில்லறை விலையும் அதிகரித்துள்ளது. தக்காளி, இஞ்சி, அவரை போன்ற காய்கறிகளின் விலை ஒரே வாரத்தில் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.55 , தக்காளி ரூ.35 , இஞ்சி ரூ.90 என விற்கப்படுகிறது. போக்குவரத்து சீரானதும், காய்கறிகளின் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வங்கிகளுக்கு பொதுமுறை அறிவிக்கப்பட்டதால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் நகரின் பல ATM மையங்கள் முடங்கியுள்ளது. பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல இடங்களில் பணபரிவர்த்தனையை மட்டுமே ஏற்றுக்கொள்வதில், பொதுமக்கள் ATM மூலம் பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.