டெல்லியின் இளம் வயது முதல்வராக அதிஷி பதவியேற்பு; அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்
டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்றார். முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வார தொடக்கத்தில் ராஜினாமா செய்தார். அதிஷி தலைமையில் புதுப்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி அமைச்சர்கள் குழுவில் சுல்தான்பூர் மஜ்ரா எம்எல்ஏ முகேஷ் அஹ்லாவத், கோபால் ராய், கைலாஷ் கெலோட், சவுரப் பரத்வாஜ் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். முதல்வராக பதவியேற்றதன் மூலம், அதிஷி இந்தப் பதவியை வகிக்கும் மூன்றாவது பெண் என்ற பெருமையை பெற்றதோடு, 43 வயதில் டெல்லியின் இளைய முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதிஷி அரசின் பதவிக்காலம் குறுகியதாக இருக்கும்.
பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை சந்தித்த அதிஷி அமைச்சரவை
சுல்தான்பூர் மஜ்ராவிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவான முகேஷ் அஹ்லாவத் மட்டும் அவரது அமைச்சரவையில் புதிய முகமாகும். முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன், அதிஷி தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களுடன் கெஜ்ரிவாலை சந்தித்தார். முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ராஜினாமா செய்ததால் ஆம் ஆத்மி கட்சிக்குள் சோகமான சூழல் நிலவுவதால், பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடக்கும் எனத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிஷியை பொறுத்தவரை, கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அவர், நிதி, கல்வி, வருவாய் உள்ளிட்ட 14 முக்கிய இலாகாக்களை நிர்வகித்து, கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது ஆட்சியை பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.