
"மக்களின் தீர்க்கமான தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது": இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போட்டியிட்ட இண்டியா கூட்டணியின் அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்
அதோடு, அரசியலமைப்பின் முகவுரையில் பொதிந்துள்ள விஷங்களை மதிக்கும் அனைத்துக் கட்சிகளையும் எதிர்க்கட்சிக் கூட்டணி வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
புது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் முக்கிய ஆலோசனைகளை நடத்த தொடங்கியவுடன், அரசாங்கத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் கூட்டணியின் எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது கார்கே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இந்தியா
"மக்களின் விருப்பத்தைத் தகர்க்க உறுதியாக இருக்கிறார் பிரதமர்": கார்கே
"மோடிக்கு எதிராக, அவரது அரசியல் பாணிக்கு எதிராக மக்கள் தீர்க்கமாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது ஒரு தெளிவான தார்மீக தோல்வி என்பதை தவிர தனிப்பட்ட முறையில் இது அவருக்கு ஒரு பெரிய அரசியல் இழப்பு. இருப்பினும், அவர் மக்களின் விருப்பத்தைத் தகர்க்க உறுதியாக இருக்கிறார்." என்று கார்கே கூறியுள்ளார்.
"நமது அரசியலமைப்பின் முன்னுரையில் பொறிக்கப்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதிக்கான விதிகளை மதிக்கும் அனைத்துக் கட்சிகளையும் இண்டியா கூட்டணி வரவேற்கிறது" என்று காங்கிரஸ் தலைவர் தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.
மேலும், இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், "அனைத்து இண்டியா கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி. நாம் நன்றாகப் போராடினோம், ஒற்றுமையாகப் போராடினோம், உறுதியுடன் போராடினோம்" என்று தெரிவித்தார்.
இந்தியா
'பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்': கார்கே
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் டி.ஆர்.பாலு, ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், கல்பனா சோரன், சரத் பவார், சுப்ரியா சூலே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே , "எங்கள் கூட்டணிக்கு கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்திய மக்களுக்கு நங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பாஜக மற்றும் அவர்களின் வெறுப்பு, ஊழல் அரசியலுக்கு மக்களின் தீர்ப்பு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் தீர்ப்பாகும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும்." என்று கூறியுள்ளார்.