லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர்
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹாலிவுட் நட்சத்திரமும் காலநிலை ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு இன்று(பிப் 10) அழைப்பு விடுத்தார். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதைத் தடுக்கும் மாநில அரசின் முயற்சிகளுக்கு டிகாப்ரியோ இன்ஸ்டாகிராமில் பாராட்டு தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அசாம் முதலமைச்சர், "வனவிலங்குகளைப் பாதுகாப்பது எங்கள் கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதியாகும். எங்கள் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அர்ப்பணிப்புடன் விடாமுயற்சியோடு நாங்கள் பாதுகாத்து வருகிறோம்." என்று கூறி, லியோனார்டோவை காசிரங்கா மற்றும் மாநிலத்திற்குச் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அசாம் அரசாங்கத்தைப் பாராட்டிய லியோனார்டோ டிகாப்ரியோ
லியோனார்டோ டிகாப்ரியோ, ஒரு தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். அவர் லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளையின் மூலம் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் பணியாற்றி வருகிறார். டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில், காசிரங்கா தேசியப் பூங்காவில் அழிந்து வரும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை நிறுத்த சர்மா தலைமையிலான அசாம் அரசாங்கம் 2021இல் எடுத்த முடிவைக் குறிப்பிட்டுள்ளார். "2000-2021க்கு இடையில் சுமார் 190 விலங்குகள் கொம்புகளுக்காக கொல்லப்பட்டன. ஆனால், அசாம் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளினால் 1977க்கு பிறகு முதமுறையாக 2022ஆவது வருடத்தில் எந்த காண்டாமிருகமும் அதன் கொம்புகளுக்காக கொல்லப்படவில்லை." என்று கூறிய லியோனார்டோ அதற்கு பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். இந்த கம்பீரமான மிருகங்களின் கொம்புகள் மருத்துவ குணமுடையதாக நம்பப்படுகிறது. மேலும், இவை நகைகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.