ஜாமீன் காலம் முடிவடைந்ததையடுத்து திகார் சிறையில் சரணடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
செய்தி முன்னோட்டம்
உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.
சரணடைவதற்காக திகார் சிறைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சஞ்சய் சிங், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட பல ஆம் ஆத்மி தலைவர்களும் சென்றனர்.
இந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி அடையும் என்று தேர்தல் கருத்துகணிப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில், அந்த கருத்துக்கணிப்புகளை இன்று சாடிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியானது என்று கூறியுள்ளார்.
இந்தியா
கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை: கெஜ்ரிவால்
திகார் சிறை அதிகாரிகளிடம் சரணடைவதற்கு முன்னதாக தனது கட்சியின் அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சி ஊழியர்களிடம் உரையாற்றிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கையாடல் செய்தற்காக மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அந்த கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
"2024 மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் நேற்று வெளிவந்தன. நான் எழுதி தருகிறேன், இந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. ஒரு கருத்துக்கணிப்பு ராஜஸ்தானில் பாஜகவுக்கு 33 இடங்கள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது . அங்கு 25 இடங்கள் மட்டுமே உள்ளன" என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
"அவர்கள் வாக்கு இயந்திரங்களில்(EVM) கையாடல் செய்ய முயற்சிக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.