சிபிஐயின் மனுவை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
டெல்லி நீதிமன்றம் இன்று சிபிஐயின் மனுவை ஏற்றுக்கொண்டு, மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. ஆம் ஆத்மி தலைவர் ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார். அதன் பிறகு, அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் அன்று மதியம் 2 மணியளவில் டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படுவார். "விசாரணை மற்றும் நீதியின் நலன்" கருதி, கெஜ்ரிவாலை சிறையில் அடைப்பது அவசியம் என சிபிஐ கூறியுள்ளது.
ஜூன் 26ஆம் தேதி கெஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ
அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று சில மணி நேரத்திற்கு முன்பு சிபிஐ கோரி இருந்த நிலையில், தற்போது அதற்கான நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. ஏற்கனவே மூன்று நாள் போலீஸ் காவலில் இருந்த கெஜ்ரிவாலின் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், சிறப்பு நீதிபதி சுனேனா சர்மா, இந்த மனு மீதான இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை திகார் சிறையில் இருந்து கடந்த ஜூன் 26ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. ஏற்கனவே இதே வழக்கில் விசாரணை நடத்துவதற்காக கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் சிறையில் அடைத்திருந்த நிலையில், ஜூன் 26ஆம் தேதி அவரை சிபிஐ கைது செய்தது.