மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தன்னை அமலாக்க இயக்குநரகம்(ED) கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நேற்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர், இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் முன் காலை 10.30 மணியளவில் இதற்கான மனுவை தாக்கல் செய்து, அவசர விசாரணையை கோர உள்ளார்
மதுபானக் கொள்கை ஊழலில் தனிப்பட்ட முறையில் கெஜ்ரிவால் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையை வகுப்பதிலும், கிக்பேக் கோருவதிலும் கெஜ்ரிவால் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாக உயர் நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டிருந்தது. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பெறப்பட்ட பணத்தை, கோவா மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாகவும், டெல்லி முதல்வர் 'சவுத் குரூப்' நிறுவனத்திடமிருந்து பல கோடி ரூபாய் கிக்பேக்காகப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21 அன்று கைது செய்தது. மதுபான ஊழல் செய்த முக்கிய சதிகாரர்களில் கெஜ்ரிவாலும் ஒருவர் என்று அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது.