ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மீதான சிறப்பு அந்தஸ்தினை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. தொடர்ந்து, இம்மாநிலம் 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கான மசோதாக்களும் நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணையானது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது என்று தெரிகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த வழக்குகள் இன்று(ஜூலை.,11) உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன பெஞ்ச்சில் 5 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல்
அதன்படி இதன் முதற்கட்ட விசாரணையில் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்க தேவையான வழிமுறைகள் எடுத்துரைக்கப்படும் என்று தெரிகிறது. இதனையடுத்து இன்று நடந்த விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வானது, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 23 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்குகளின் விசாரணை இனி வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் நீதிமன்றத்தில் நடக்கும் என்று அறிவித்துள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்தது குறித்து மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று நேற்று(ஜூலை.,10) தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.