100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன?
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தொழிலாளர் சங்கம் இன்று(அக்.,12) திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.வசந்தமணி தலைமை வகித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு 3 மாத ஊதிய நிலுவை தொகையினை உடனடியாக வழங்கவேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியத்தினை கொடுக்க வேண்டும். வேலைத்தளத்தில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவததோடு, அதற்கான கூலியையும் ரூ.600ஆக உயர்த்தவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு நிதி ஒதுக்கினால் உடனடியாக ஊதியம் வழங்கப்படும்
இதேபோல் திருப்பூர், கோவை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஊதிய நிலுவை தொகையினை உடனடியாக வழங்க கோரி பல போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் லட்சுமணன் இதுகுறித்து பேசியதாவது, தமிழ்நாடு முழுவதுமே இதற்கான நிதி வரவில்லை. அதனால் தான் இவர்களது ஊதியம் கொடுக்காமல் நிலுவையில் உள்ளது. வரும் வாரத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கிவிட்டால், வட்ட வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக சம்மந்தப்பட்டவர்களின் ஊதிய தொகையினை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் பாராமுகம் தான் காரணம்
மத்திய அரசின் பாராமுகத்தால் தான் இந்த திட்டம் இவ்வாறு குலைக்கப்பட்டுள்ளது என்று பரவலாக பேசப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும் நாடு முழுவதுமான நிதி ஒதுக்கீடு என்பது இந்த திட்டத்திற்கு மிகவும் குறைவுதான். கடந்த 2022-23ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூ.98 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2023-24ம் நிதியாண்டில் இதற்கான ஒதுக்கீடு வெறும் ரூ.60 ஆயிரம் கோடி தான். மேலும், வருடத்திற்கு 100 நாட்கள் வேலை என்னும் நிலை மாறி தற்போது 50-65நாட்கள் மட்டும் தான் வேலை நடக்கிறது என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 4 மாதங்கள் வரை நிலுவை
மேலும் அவர் இது குறித்து பேசுகையில், "குளம் குட்டை உள்ளிட்டவைகளை தூர்வாருதல், சுத்தம் செய்தல் போன்றவை தான் இந்த வேலை வாய்ப்பு திட்டத்தின் அடிப்படை. இதில் பெண்களும் சிறு-குறு விவசாய தோட்டங்களில் பணியில் ஈடுபடுவர்" என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 4 மாதங்கள் வரை ஊதியம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் இந்த வருமானத்தினை தங்கள் சேமிப்பாக எண்ணி தான் பணியில் ஈடுபட்டிருப்பர். வருவது பண்டிகை காலம் என்பதால் இந்த ஊதியமும் வழங்கப்படவில்லையெனில் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும் ஏ.பஞ்சலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண்டிற்கு இரண்டரை லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் - வல்லுநர்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்று கூறப்படும் இந்த 100 நாள் வேலை திட்டடமானது தமிழ்நாட்டில் 2008ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கில் தான் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் முழுமையாக அனைவரையும் சென்றடைய வேண்டும் எனில், ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி நிதி ஒதுக்கினால் மட்டுமே சாத்தியப்படும் என்று வேளாண் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.