மாணவர்களுக்கும் ஆதார் போல ஒரு கார்டு; கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் APAAR ID; நன்மைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
செய்தி முன்னோட்டம்
மத்திய கல்வி அமைச்சகம் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய APAAR (Automated Permanent Academic Account Registry) என்பது மாணவர்களுக்கான ஒரு பிரத்யேக டிஜிட்டல் அடையாள அட்டையாகும். இது தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் தேசிய கிரெடிட் மற்றும் தகுதி கட்டமைப்பு (NCrF) ஆகியவற்றின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை "ஒரே தேசம், ஒரே மாணவர் அடையாள அட்டை" என்றும் அழைக்கிறார்கள். ஆதார் கார்டு போலவே, இது ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணை வழங்கும். இந்த எண்ணைப் பயன்படுத்தி ஒரு மாணவரின் கல்விச் சாதனைகள், சான்றிதழ்கள் மற்றும் பிற கல்வி ஆவணங்களை ஒரே இடத்தில் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்க முடியும்.
நன்மைகள்
APAAR ID இன் நன்மைகள் என்ன?
பாரம்பரிய காகித வழி ஆவணப் பராமரிப்பை விட, APAAR ID மாணவர்களுக்குப் பல வசதிகளை வழங்குகிறது. இதன் மூலம், மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியல்கள், பட்டச் சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு அல்லது பிற கலைத் திறன் சான்றிதழ்களை எங்கும் நேரில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. 12 இலக்க எண்ணை வழங்கினால் போதுமானது. கல்வி ஆவணங்களில் போலிகள் உருவாக்கப்படுவதைத் தடுத்து, உண்மையான ஆவணங்களை உறுதிப்படுத்த இது உதவுகிறது. ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கோ கல்வி நிறுவனங்களை மாற்றும்போது, மாணவர்களின் ஆவணங்களை சரிபார்ப்பது மிகவும் எளிதாகிறது.
கல்லூரிகள்
கல்லூரி சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு
கல்லூரிக் கல்விச் சேர்க்கை, நுழைவுத் தேர்வுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் என அனைத்து இடங்களிலும் இந்த ஐடி கார்டை சமர்ப்பிக்கலாம். இதனால் ஒரிஜினல் சான்றிதழ்கள் தொலைந்து போவது அல்லது சேதமடைவது குறித்த கவலை இனி மாணவர்களுக்குத் தேவையில்லை.
தகுதிகள்
APAAR ID உருவாக்கத் தகுதிகள் என்ன?
இந்த அடையாள அட்டையைப் பெற ஒரு மாணவர் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்: UDISE+ பதிவு: மாணவர்கள் 'கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு' (UDISE+) தரவுத்தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு: மாணவரின் பெயர் மற்றும் விவரங்கள் ஆதார் அட்டையில் உள்ளவாறே UDISE+ பதிவிலும் இருக்க வேண்டும். PEN எண்: மாணவர்களிடம் நிரந்தர கல்வி எண் (Permanent Education Number - PEN) இருக்க வேண்டும்.
உருவாக்கம்
APAAR ID உருவாக்குவது எப்படி?
மாணவர்கள் தங்கள் APAAR IDயை உருவாக்கக் கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்: பள்ளியை அணுகுதல்: மாணவர்கள் தங்களின் விவரங்களைச் சரிபார்க்க முதலில் தாங்கள் படிக்கும் பள்ளியை அணுக வேண்டும். பெற்றோர் அனுமதி: மாணவர் மைனராக (18 வயதிற்கு உட்பட்டவர்) இருந்தால், அவரது தரவுகளைப் பயன்படுத்தப் பெற்றோரின் சம்மதக் கடிதம் பெறுவது அவசியம். அடையாளச் சரிபார்ப்பு: பள்ளி நிர்வாகம் மாணவரின் அடையாளத்தை உறுதி செய்து, தரவுகளைச் சரிபார்க்கும். டிஜிலாக்கர்: சரிபார்ப்பு முடிந்ததும், 12 இலக்க APAAR ID உருவாக்கப்படும். இது தானாகவே மாணவரின் டிஜிலாக்கர் கணக்கில் சேர்க்கப்படும், அங்கிருந்து மாணவர்கள் தங்கள் ஐடி கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.